உள்ளூர் செய்திகள்
மீனவர்கள் போராட்டம்

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்குள் போராட்டம்- மீனவர்கள் 400 பேர் மீது வழக்கு

Published On 2022-05-25 12:13 IST   |   Update On 2022-05-25 12:13:00 IST
16 மீனவ கிராம மக்கள் கடல் வழியாக படகில் சென்று துறைமுகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம், கப்பல் கட்டும் தளம் உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனால் வாழ்வாதாரம் பாதித்த மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டு அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

மீதமுள்ள அறிவிக்கப்பட்ட 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுப்பள்ளி துறைமுக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மீண்டும் 16 மீனவ கிராம மக்கள் கடல் வழியாக படகில் சென்று துறைமுகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மீனவர்கள் சிலர் துறைமுக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறைமுக நிர்வாகத்தினர் காட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் சுமார் 400 பேர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மீனவர்களை தொடர்புகொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இதனை ஏற்காத மீனவர்கள் 16 மீனவ கிராமத்தினரிடையே பேசி இன்று தெரிவிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News