உள்ளூர் செய்திகள்
காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கட்டிமாங்கோடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-24 12:35 GMT   |   Update On 2022-05-24 12:35 GMT
கட்டிமாங்கோடு ஊராட்சி மூலச்சன்விளைக்கு கடந்த சில நாட்களாகவே குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீரின்றி தவிக்கும் தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க கேட்டு மூலச்சன்விளை ஜங்ஷனில் நேற்று மாலை காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி:

குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கட்டி மாங்கோடு ஊராட்சி மூலச்சன்விளைக்கு கடந்த சில நாட்களாகவே குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. 

பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இப்பகுதி மக்கள் கடந்த 13-ந் தேதி மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து 15-வது மத்திய நிதி குழு மானியத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மணலிகுளம் அருகில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும், ஊற்றுக்குழி கிணற்றை தூர்வாரி சுத்திகரித்து மோட்டார் பொருத்தி மூலச்சன்விளை, காரங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் குடிநீரின்றி தவிக்கும் தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க கேட்டு மூலச்சன்விளை ஜங்ஷனில் நேற்று மாலை மீண்டும் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். 

சி.பி.ஐ.எம்.எல். விடுதலை கட்சி கிளை செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சுசீலா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து கலந்து கொண்டு பேசினார். சிபிஐஎம்எல் விடுதலை கட்சி நிர்வாகிகள் கார்மல், அர்ஜூனன், அய்யப்பன், கணபதி, அனிட்டா உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

தகவலறிந்து வந்த கிராம ஊராட்சி உதவி இயக்குநர் (பொறுப்பு) வேலுமயில் போராட்டாக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி ரூ.6 லட்சம் செலவில் நடக்கும் பணிகள் முடிவடையும் வரை லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

இந்த பேச்சு வார்த்தையில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராஜ்குமார், அனிதா, ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து உடனடியாக லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News