உள்ளூர் செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் 7 பேர் கைது

Published On 2022-05-24 12:15 GMT   |   Update On 2022-05-24 12:15 GMT
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ் என்பவரை கடந்த மே மாதம் 9-ந் தேதி முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச்சேர்ந்த ஜான்மனோஜ் (வயது 29), அலெக்சாண்டர் (27), ஜஸ்டின் பவுல்ராஜ் (24), ரொசாரியோ பிராங்க்ளின் (23), அலெக்சாண்டர் (27), அந்தோணி ரெய்மண்ட் (27), ரூபன்லூர்துராஜ் (28) ஆகியோர் சேர்ந்து வழிமறித்து தடியால் அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்ய முயற்சி செய்தது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.

எனவே மேற்படி நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அனைவரும் தொடர்ந்து கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், அடிதடி சண்டை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கி வந்தனர்.

மேலும் இவர்கள் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்கண்ட 7 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கஉத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News