உள்ளூர் செய்திகள்
ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

கடம்பூர் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

Published On 2022-05-24 06:38 GMT   |   Update On 2022-05-24 06:38 GMT
கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை மூலக்கடம்பூர், ஏரியூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து அங்குள்ள விளை நிலங்களில் நின்று மக்களை அச்சுறுத்தியது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடுவில் நின்று வாகன ஓட்டிகளை சில சமயம் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை மூலக்கடம்பூர், ஏரியூர் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. அங்குள்ள விளை நிலங்களில் நின்று மக்களை அச்சுறுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக பட்டாசு வெடித்தனர். ஆனாலும் சுமார் 3 மணி நேரமாக வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை ஆண் யானை அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.

இதன் பிறகு ஊர் பொதுமக்கள், வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags:    

Similar News