உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஜமாபந்தி மனுக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

Update: 2022-05-23 05:48 GMT
தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும்.

திருப்பூர்:

தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில், மாவட்டம் தோறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் மாதத்துக்கு முன்னதாக பசலி ஆண்டு கணக்குகளை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்தந்த நாட்களில், ஜமாபந்தி அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பெறப்படும் மனுக்கள் விபரத்தை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உரிய அதிகாரிகள் வாயிலாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜமாபந்தி முகாமில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுக்கலாம். அந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நிறைவு நாளில் சான்றிதழ் அல்லது நல உதவி வழங்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்கள் விவரத்தை புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வருவாய்த்துறை கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

மனுக்கள் விவரத்தையும் அதன் மீதான நடவடிக்கை விவரத்தையும் பதிவு செய்யப்படும். தமிழகத்தில் எந்த தாலுகாவாக இருந்தாலும் தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News