உள்ளூர் செய்திகள்
மதுரை மாவட்டத்தை கலக்கிய கொள்ளையன் கைது
மதுரை மாவட்டத்தை கலக்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
மதுரை
மதுரை நிலையூர், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சரவணன் (42). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் மாடி கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டான். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதற்கிடையே நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்த ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் வெங்கடேஷ் (39) என்பவர் அதே நாளில் நள்ளிரவு கைத்தறி நகரில் நடந்து சென்றார். அப்போது அவரிடம் மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றார்.இது தொடர்பாக வும் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேற்கண்ட 2 வழக்குகள் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் நிலையூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ரவி மகன் ராஜா (24) என்பது தெரியவந்தது.
இவர் மீது ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையம் மட்டுமின்றி மட்டுமின்றி மதுரை பெருங்குடி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளிலும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ராஜாவின் கூட்டாளிகள் 2 பேர் நிலையூர், மூகாம்பிகை நகருக்கு ஆயுதங்களுடன் வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் முருகன் மனைவி மீனாட்சி (59) வீட்டில் கண்காணிப்பு காமிரா சூறையாடப்பட்டது. இதை தட்டிக்கேட்ட மீனாட்சியை குத்திக் கொன்று விடுவதாக அந்த வாலிபர்கள் மிரட்டி விட்டு தப்பினர். இதுதொடர்பாக மீனாட்சி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா வழக்குப்பதிவு செய்து தென்பரங்குன்றம், சிலோன் காலனி லோகநாதன் மகன் வினீத் (24), நிலையூர் ஆதிதிராவிடர் காலனி வானழகன் மகன் காளீஸ்வரன் (23) ஆகியோரை கைது செய்தனர்.