உள்ளூர் செய்திகள்
தெருக்களில் சுற்றித்திரியும் குதிரைகள்

சுந்தராபுரத்தில் இரவு நேரங்களில் தெருக்களில் சுற்றித்திரியும் குதிரைகள்

Published On 2022-05-20 16:43 IST   |   Update On 2022-05-20 16:43:00 IST
கல்லுக்குழி வீதி, குறிச்சி, காந்திஜி ரோடு, முருகா நகர் ஆகிய பகுதிகளில் 3 குதிரைகள் ஒன்று சேர்ந்து இரவுநேரங்களில் சுற்றி திரிகின்றன
குனியமுத்தூர்:
 
கோவை சுந்தராபுரம் பகுதியில் இரவு நேரங்களில் தெருக்களில் குதிரைகள் வலம் வந்து கொண்டிருக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக  கல்லுக்குழி வீதி, குறிச்சி, காந்திஜி ரோடு, முருகா நகர் ஆகிய பகுதிகளில் 3 குதிரைகள் ஒன்று சேர்ந்து இரவுநேரங்களில் சுற்றி திரிகின்றன. 

பகல் நேரங்களில் மெயின் ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சிறு சிறு விபத்துகள் கூட ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் தெருக்களில் அமைந்துள்ள மளிகை கடைகளில் ,வெளியே தொங்கும்  வாழைப்பழ தாரை கடித்து இழுத்து விடுகின்றன. 

தெருக்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குதிரைகளைக் கண்டு  மிரண்டு சாக்கடைக்குள் விழும் அவலநிலை உள்ளது. பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
 
குதிரை வளர்ப்பவர்கள் வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு இவ்வாறு தெருக்களில் அலைய விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

சுந்தராபுரம் மட்டுமன்றி கோவையின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய அவல நிலை காணப்படுகிறது. கோவை மாநகராட்சி இத்தகைய செயலுக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துமீறி அலையும் குதிரைகளை கொண்டு சென்று ஓரிடத்தில் அடைத்து விட வேண்டும். 
 
பின்னர் குதிரைகளின் உரிமையாளர்கள் வரும்போது அவர்களிடம் அபராதத் தொகை வாங்கிக் கொண்டு பின்னர் அனுப்பிவிட வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கோவையின் அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் பயமின்றி நடமாடலாம். சமூக ஆர்வலர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Similar News