உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சாலை வசதியில்லாததால் மலை கிராமத்தில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை மரணம்

Published On 2022-05-20 16:29 IST   |   Update On 2022-05-20 16:29:00 IST
சாலை வசதி இல்லாததால் தான் இந்த குழந்தை உயிரிழந்ததாக அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த துத்திகாடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலைகிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை.

இவர்கள் செல்லும் பாதை வனத்துறைக்கு உட்பட்ட இடத்தில் உள்ளதால், சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் செல்லும் மண் சாலையில் 8 இடங்களில் மழை நீர் செல்லும் ஓடை கால்வாய் உள்ளது.

மழை காலங்களில் தண்ணீர் செல்வதால் இந்த ஓடை கால்வாய்களை கடந்து செல்வது மிகவும் சிரமம். இதுபோன்ற சமயங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவதில்லை.

எனவே சாலை வசதியை செய்து தர கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெள்ளை மலை கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன் மனைவி விஜயா (வயது 22) கர்ப்பமாக இருந்தார்.

கடந்த 14-ந்தேதி சனிக்கிழமை விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் மலை கிராமத்திலேயே விஜயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து 2 நாட்கள் கழித்து விஜயா கத்தாழம்பட்டு துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு விஜயா மற்றும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குழந்தை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது. போதுமான சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

சாலை வசதி இருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பிணியை மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றிருக்கலாம். குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

சாலை வசதி இல்லாததால் தான் இந்த குழந்தை உயிரிழந்ததாக அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Similar News