உள்ளூர் செய்திகள்
போலீசார் பற்றாக்குறையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
தேவகோட்டையில் போலீசார் பற்றாக்குறையால்கு ற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வளர்ந்து வரும் நகராட்சி ஆகும்.
15 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் உள்ளது. தேவகோட்டை நகருக்குள் அன்றாடம் தேவைகளுக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
சில மாதங்களாக தேவகோட்டை நகரில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, வீடு, கோவில்களில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. பகலில் இருசக்கர வாகனங்கள் கடை வாசலில் நிறுத்தி விட்டு சிறிது நேரத்தில் வந்து பார்த்தால் வாகனங்களை காணமல் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். நகர் காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இருக்க வேண்டும். ஆனால் மிக குறைந்த அளவே காவல்துறையினர் உள்ளனர்.
திறமையான காவல்துறை அதிகாரிகள் இருந்தும் காவலர்கள் பற்றாக்குறையால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை உட்கோட்டத்திற்கு ஆய்வுக்கு வந்த ஐஜி அன்பு, செய்தியாளர்களிடம் இங்கு உள்ள காவல்துறை பற்றாக்குறை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்றார். அப்போது டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார், துணைத் கண்காணிப்பாளர் ரமேஷ் உடன் இருந்தனர். ஆனால் இது நாள் வரை தேவகோட்டையில் போலீசார் பற்றாக்குறையாகவே உள்ளது.
நகரில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தேவகோட்டை பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். காவலர்கள் பற்றாக்குறையால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். காவல் நிலையங்களில் பாதி அளவு கூட காவலர்கள் இல்லை என்பது வேதனையாக உள்ளது. நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம் என்று சமூக ஆர்வலர் ராமலிங்கம் கூறினார்.