உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத் காங்கிரஸ் தலைவர் சிற்றரசை படத்தில் காணலாம்.

தி.மு.க. கூட்டணியில் தொடரக்கூடாது- தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

Published On 2022-05-20 10:41 GMT   |   Update On 2022-05-20 10:41 GMT
தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும், தி.மு.க கூட்டணி கட்சியினரின் செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிற்றரசு தெரிவித்தார்.
தருமபுரி:

பேரறிவாளன் விடுதலையை தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடுவதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதையடுத்து, பேரறிவாளன் விடுதலையை வரவேற்று தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும், தி.மு.க கூட்டணி கட்சியினரின் செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிற்றரசு தெரிவித்தார்.

பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக்கும், கட்சியின் தமிழ்நாடு கமிட்டிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து சிற்றரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1984 ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளேன். உலக நாடுகள் போற்றும் தலைவரான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொண்டாடுவதை ஏற்கமுடியவில்லை.

எனவே, தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, எனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

என்னைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News