உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியபோது எடுத்தபடம்.

திருச்சி மாநகர வளர்ச்சிக்கான திட்டங்களை கேட்டு பெறுவோம்-அமைச்சர் கே.என்.நேரு உறுதி

Published On 2022-05-20 15:08 IST   |   Update On 2022-05-20 15:08:00 IST
திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநகர வளர்ச்சிக்கான திட்டங்களை கேட்டுப்பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.


திருச்சி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி கிழக்குத் தொகுதியான எடத்தெரு அண்ணா சிலை அருகில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு  பாலக்கரை பகுதி செயலாளர் டி.பி.எஸ்.எஸ்.ராஜா முகமது  தலைமை தாங்கினார்.  

கூட்டத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு பேசியதாவது:

தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகரம் மிகப்பெரிய வளர்ச்சியை காண இருக்கிறது. சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி, உய்யகொண்டான் கால்வாயை சீரமைத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எவ்வாறு அதில் குளித்து மகிழ்ந்தார்களோ, அதேபோல மீண்டும் உருவாக்கப்படும்.

மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் தரம் உயர்த்த ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருச்சியில் டிரேட் சென்டர் மற்றும் மிகப்பெரிய ஸ்டேடியம் அமைய உள்ளது. அதுபோல் திருச்சி பழைய பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை சர்வீஸ் சாலையோ அல்லது மேம்பாலமோ போக்குவரத்து வசதிக்காக இன்னும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். 

தற்போது நாம் பல்வேறு திட்டப்பணிகளை செய்வோம் என கூறினால் அ.தி.மு.க.வினர் நம்மை பார்த்து பொய் சொல்கிறார் என்கிறார்கள். திருச்சியில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், மேம்பாலங்கள், கல்லூரிகள் எல்லாம் கலைஞர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. கலைஞரும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஸ்டாலினும் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்.

ஆளுநரை கண்டால் தி.மு.க வினர் அச்சப்படுகிறார்கள் என கூறினார்கள்  ஆனால் உச்சநீதிமன்றமே ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் என கூறி இருக்கிறது. நினைத்ததையெல்லாம் சாதிக்கும் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.

தற்போது தி.மு.க. தலைமையிலான மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மழை மும்மாரி பொழிந்து வருகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12-ந்தேதி தான் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மழை பொழிந்து அதிக அளவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

எனவே, ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவே அணையை திறக்க வாய்ப்பு உள்ளது. திருச்சி மாநகரம் வளர்ச்சிப்பெற மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை கேட்டுப் பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News