உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சங்கரன்கோவிலில் கட்டுமான முறைகேட்டில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா?-லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை

Published On 2022-05-20 14:59 IST   |   Update On 2022-05-20 14:59:00 IST
சங்கரன்கோவிலில் கட்டுமான முறைகேட்டில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை அரசு ஒதுக்கிய நிதி மூலம் நகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கட்டிடம் கட்டுதல், சாலை அமைத்தல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. அதில் பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

குடியிருப்பு கட்ட தரைத்தளம் மற்றும் மாடி கட்ட அனுமதி கோரப்பட்ட தரைத்தளம் மட்டும் கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

இதேபோல் அங்ககவிநாயகர் கோவில் தெருவில் சாலை போடாமல்  சாலை அமைத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், திருநீலகண்டர் ஊரணியை சுற்றி சாலை அமைத்து நடைபாதை அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும்  புகார் எழுந்தது.

 இதையடுத்து நெல்லை லஞ்சஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று கோமதிநகர் காலனி நகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து சாலை மற்றும் நடைபாதை அமைத்த இடங்களில் பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த பணிகள் மாலை வரை நீடித்தது.

தொடர்ந்து அப்போதைய அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களிடம் லஞ்சஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.

முறைகேடு புகாரில் முன்னாள் அதிகாரிகள் மட்டுமின்றி பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் லஞ்சஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

Similar News