உள்ளூர் செய்திகள்
கொலை

மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு- மகனை வெட்டிக் கொன்ற தந்தை

Published On 2022-05-20 13:33 IST   |   Update On 2022-05-20 13:33:00 IST
விழுப்புரம் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். அவரது மகன் ஹரிபிரசாத் (வயது 27). மருந்து வணிகம் செய்துவந்தார்.

கடந்த சில நாட்களாக ஹரிபிரசாத் வணிகத்துக்கு செல்லாமல் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை பார்த்த விநாயகம் அவரை கண்டித்தார். நேற்றும் வழக்கம்போல் வீட்டுக்கு வந்த ஹரிபிரசாத் தனது தந்தையிடம் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டார்.

ஆத்திரமடைந்த விநாயகம் மகன் என்று கூட பாராமல் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் ஹரிபிரசாத்துக்கு முகம் முழுவதும் சிதைந்தது. இதனை பார்த்ததும் விநாயகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த காயத்துடன் கீழே விழுந்த ஹரிபிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனடியாக அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரசாத் இறந்தார்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து மகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை விநாயகத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News