உள்ளூர் செய்திகள்
விபத்தை ஏற்படுத்திய மினி வேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி

ஒட்டன்சத்திரம் அருகே தறிகெட்டு ஓடிய மினிவேன் மோதி 3 பேர் பலி

Published On 2022-05-20 06:03 GMT   |   Update On 2022-05-20 06:03 GMT
ஒட்டன்சத்திரம் அருகே தறிகெட்டு ஓடிய மினிவேன் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து பூக்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை கோவையை சேர்ந்த வாலிபர் ஓட்டி வந்தார். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மாபட்டி பைபாஸ் சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பைக்கில் வந்தவர்கள் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த சந்திரலேகா(52) என தெரியவந்தது. மற்றொருவர் விபரம் தெரியவில்லை. சந்திரலேகா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

விபத்தை ஏற்படுத்திய வேன் அதன்பிறகு சென்டர்மீடியனை உடைத்துக்கொண்டு எதிரே உள்ள சாலையில் புகுந்தது. அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒத்தையூரை சேர்ந்த கருப்பசாமி(55) என்பவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் கருப்புசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தறிகெட்டு ஓடிய வேன் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதால் அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தப்பிஓடிய வேன் டிரைவரையும் தேடி வருகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News