உள்ளூர் செய்திகள்
நூற்றாண்டு விழா.

நகரத்தார் சார்பில் நூற்றாண்டு விழா

Published On 2022-05-17 18:10 IST   |   Update On 2022-05-17 18:10:00 IST
திருப்பத்தூர் அருகே நகரத்தார் சார்பில் நூற்றாண்டு விழா நடந்தது.
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டி கிராமத்தில் சாலை திறந்ததன் நூற்றாண்டுவிழா நகரத்தார் சார்பில் கொண்டாடப்பட்டது. 

நகரத்தார்கள் ஒன்றிணைந்து சொக்கலிங்க செட்டியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு கோவிலூர் மெய்யப்ப சுவாமிகள், சொ. சுப்பையா, தேவகோட்டை எஸ்.ராமநாதன், சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனர்  சேதுகுமணன், நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் துரைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அவர்கள் பேசுகையில், கண்டவராயன்பட்டி என்ற குக்கிராமத்தில் 1893-ம் ஆண்டில் பிறந்த தெ.சி.நா. சொக்கலிங்கம் செட்டியார் சிறுவயதில் இருந்தே சேவை மனப்பான்மையோடு, இரக்க குணம் கொண்டவராகவும் திகழ்ந்துள்ளார். அந்த காலத்தில் பெரிய நகரம் என்றால் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, போன்ற பகுதிகளுக்கு வணிக ரீதியாகவும் மற்றும் அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காகவும் மக்கள் நடை பயணமாகவும், மாட்டு வண்டிகளிலும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதை பார்த்த சொக்கலிங்கம் கடந்த 1922-ம் ஆண்டில் சொந்த நிதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து  தந்துள்ளார்.மேலும் சாலையின் இருபுறங்களிலும்   தொலைநோக்கு சிந்தனையோடு புளி, நாவல் போன்ற 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தது மட்டுமல்லாமல் அதை பராமரிக்கும் பணிக்காக வேலையாட்களையும் நியமித்தார். 

அரசாங்கம் செய்ய வேண்டிய  அனைத்து சேவைகளையும் தனி ஒரு ஆளாக எந்த ஒரு நவீன  வசதிகளும் இல்லாத அக்காலத்தில் நிறைவேற்றியுள்ளார். இவரின் வள்ளல் தன்மையை  போற்றிப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும் என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

Similar News