உள்ளூர் செய்திகள்
வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் திணறும் கொடைக்கானல் சாலை.

கொடைக்கானலில் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-05-16 11:25 IST   |   Update On 2022-05-16 11:25:00 IST
கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
கொடைக்கானல்:

கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாட்களிலும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வார இறுதிநாட்களில் கட்டுக்கடங்காமல் சுற்றுலாப்பயணிகள் வருகை மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான நெடுஞ்சாலையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை சாலை நடுவே நிறுத்தி விட்டு பொருள்களைக் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவ தோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பிரதான நெடுஞ்சாலைகளில் கார் பார்க்கிங் இல்லாத தங்கும் விடுதிகளில் தங்கவும், உணவருந்தவும் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர்.

இதனால் அந்த சாலைகளில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்திலிருந்து ஏரிப் பாலம் வரும் போது அதன் வளைவு பகுதியில் இளநீர் மற்றும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு இளநீர் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேசமயம் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று இளநீர் பருகுபவர்கள் அவ்வழியாக வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக 7 ரோடு பகுதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.

 7 ரோடு முதல் நகராட்சி அலுவலகம் வரை சாலைத் தடுப்புகள் அமைத்து இருபுறமும் வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு விபத்துகள் ஏற்படும் அபாயம் குறையும்.

Similar News