உள்ளூர் செய்திகள்
ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை
வைத்திக்குப்பம்-குருசுகுப்பம் பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி எதிராளிகளை கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் நாட்டு வெடிகுண்டு வீசியும்,அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பின் புதுவையில் உள்ள அனைத்து ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் அதிரடியாக நுழைந்து வெடிகுண்டு,பயங்கர ஆயுதங்கள் உள்ளனவா என சோதனை நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் புதுவையில் குறையவில்லை.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காராமணிக்குப்பம் ெரயில்வே கேட் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது.உடனே சம்பவ இடத்திற்கு சென்ற உருளையன்பேட்டை போலீசார் வெடிக்காமல் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் வன அலுவலகம் அருகே புதரில் மறைத்து வைத்திருந்த 4 வெடிகுண்டை கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயார் செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் தலைமையில் முத்தியால் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவப்பிரகாசம், ஜான்சன் மற்றும் போலீசார் வைத்திக்குப்பம், குருசுகுப்பம் மற்றும் சோலைநகர் பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனினும் ரவுடிகளை போலீசார் எச்சரித்து சென்றனர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் ரவுடிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.