உள்ளூர் செய்திகள்
கட்டுமான நல சங்கம் சார்பில் தலைவர் சரவணன், முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.

பாகூர் கொம்யூன் வளர்ச்சி திட்டபணிகள் நிறுத்தம்

Published On 2022-05-14 15:17 IST   |   Update On 2022-05-14 15:17:00 IST
ரூர்பன் திட்டத்திற்கு நிதி ஒதுக்காததால் பாகூர் கொம்யூன் வளர்ச்சி திட்டபணிகள் நிறுத்தியதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சரிடம் கட்டுமான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
 
புதுச்சேரி கட்டுமான நலச்சங்க தலைவர் சரவணன், முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் பாகூர், திருநள்ளாறு கொம்யூனை தத்தெடுத்து ரூர்பன் திட்டத்தில் மாதிரி கொம்யூனாக மாற்ற ரூ.200கோடியில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

பணிக்கான மதிப்பில் தவணையில் ரூ.2கோடியை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்து இருந்தது.

ஆனால் இதற்கான தொகையை அரசு டெபாசிட் செய்யாமல்‌ வேலையை தொடங்கியபின், செய்த பணிக்கு தவணை தொகையை 3 மாதங்களாக வழங்காமல் நிலுவையில் வைத்து உள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்கும் போது, இத்திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட பணிக்கு முறையாக அனுமதி கொடுக்கவில்லை என்கின்றனர். அதனால் பணிக்கான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவது கடினம் என தெரிவிக்கின்றனர்.

இதனால் பாகூர் கொம்யூனில் ரூர்பன் திட்டத்தில் தொடங்கப்பட்ட போர்வெல், குடிநீர் குழாய் அமைத்தல், பஸ்நிலையம், மீன்வளத்துறை, சிமெண்ட் மற்றும் தார்சாலை அமைக்க உள்ள பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும் பாகூர் பகுதியில் அரசு ஒப்புதல் வழங்காத நிலையில் ரூ.8 கோடிக்கு சாலைபணிக்கு டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணி ஆணை வழங்காமல் இருந்து வருகிறது.

இதேபோல பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பணி ஆணை வழங்காமல் இருந்து வருகிறது. அரசு பணி ஆணை வழங்கும்போது அதற்கான முழு தொகையையும் வைப்பு நிதியில் வைத்து திட்ட பணிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பாதிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டு வேண்டிய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Similar News