உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் அளவு குறைவதாக வந்த புகாரால் மானாமதுரை பஸ்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் வெறிசோடி காணப்படுகிறது.

பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடைபெறுவதாக புகார்

Published On 2022-05-11 15:36 IST   |   Update On 2022-05-11 15:36:00 IST
மானாமதுரையில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
மானாமதுரை 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க்குக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து ராமேசுவரத்து  செல்வதற்கு சுற்றுலா குழுவினர் குடும்பத்துடன் காரில் வந்தனர். இவர்கள் அங்குள்ள ஊழியரை அழைத்து முழு டேங்க் நிரப்ப சொல்லியுள்ளனர். 

காரில் 50 லிட்டர் கொள்ளளவு உள்ள டேங்கில் ஏற்கனவே 10 லிட்டர் உள்ள நிலையில் 45 லிட்டர் பெட்ரோல் போட்டதாககூறி ஊழியர்கள் பணம் வாங்கி உள்ளனர்.  தொடர்ந்து கார் சிறிது தூரம் சென்ற போது பெட்ரோல் குறைந்துள்ளதாக கார் மீட்டர்  காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து காரை திருப்பி அதே பெட்ரோல் பங்கில் மீண்டும் டேங்கில் பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளனர். 

மீண்டும் 12 லிட்டர் பெட்ரோல் போட்டபின் நிரம்பியதாக ஊழியர்கள் கூறி அதற்குரிய பணத்தை கேட்டுள்ளனர். காரின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 50 லிட்டர் இருக்கும் போது எப்படி கொள்ளளவை மீறி பெட்ரோல் போட்டீர்கள் என கேட்டதற்கு ஊழியர்கள் வாக்குவாதத்தில் தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்தனர். இதனால் பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

காரின் டேங்க் கொள்ளளவை மீறி பெட்ரோல் போட்டதால் பெட்ரோல் பங்க்கின் முறைகேடு தெரியவந்ததாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி  தெரிவித்தனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மக்களிடத்தில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு கொள்ளை லாபம் அடிக்கும் பெட்ரோல் பங்க் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதேபோல் மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்திருப்பது பெட்ரோல் போடவந்த வாடிக்கையாளுக்கு தெரியவந்தது. பெட்ரோல் பங்கில் அதிகமாக வாகனங்கள் வரிசையில் வரும்போது அவசர அவசரமாக பெட்ரோல் நிரப்பும் போது வாடிக்கையாளர்கள் அளவு குறைவதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தவிர்க்க கூடுதலாக ஆட்களை பணிஅமர்த்த வேண்டும். பெட்ரோல் கணக்கிடும் கருவிகளையும் வாரம் ஒருமுறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். 

மானாமதுரையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஏர்நிரப்பும் வசதி என எதுவும் கிடையாது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மானாமதுரை பகுதியில் பெட்ரோல் பங்கில் நடைபெறும் மோசடிகளை உடனடியாக தடுக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மானாமதுரை தாசில்தார் தமிழரசன் பஸ்நிலையம்  அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் சோதனை செய்து விசாரித்தார்.

Similar News