உள்ளூர் செய்திகள்
திருப்புவனம் மடப்புரத்தில் மதுபான பாரை அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மதுபான பாரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, திருப்புவனம் நகரசெயலாளர் ஈஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த இயக்கம் குறித்து ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி கூறும்போது, மடப்புரம் கோவில் பக்தர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பெண்கள் வருகை தரும் பாதையிலும், தினந்தோறும் பள்ளிக்கூடத்துக்கு செல்கிற மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செல்கிற பாதையிலும் மற்றும் சென்மேரிஸ் அரியவா பள்ளி மாணவிகள் செல்கிற பாதையில் மதுபான பார் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பகுதி பெண்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். மேலும் இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம் என்று தெரிவித்தார்.