தேவகோட்டையில் விவசாயி அடித்துக்கொலை- பக்கத்து வீட்டு வாலிபர் கைது
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரைவேலு (வயது 60) விவசாயி. இவருக்கு விஜயராணி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.
சித்திரைவேலுவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நாகூர் பிச்சை. சித்திரைவேலு மற்றும் நாகூர்பிச்சை ஆகிய இருவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவும் தகராறு நடந்துள்ளது.
இருவரது குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நாகூர்கனியின் மகன் செல்வம் (38) கீழே கிடந்த கட்டையால் சித்திரைவேலுவை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சித்திரைவேலு தாக்கப்பட்டது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் செல்வம் மீது கொலைமுயற்சி வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சித்திரைவேலு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து சித்திரை வேலுவை அடித்துக்கொன்ற செல்வத்தை கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செல்வம் சமீபத்தில் தான் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். மேலும் அவரது மனைவிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.