உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் உள்ள உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

Published On 2022-05-07 15:26 IST   |   Update On 2022-05-07 15:26:00 IST
திருப்பத்தூரில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நெற்குப்பை

கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனால் தமிழகம் முழுவதும்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  உணவகங்களில் சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஷவர்மா விற்பனை செய்யும் ஓட்டல்கள், ஜஸ்கிரீம் தயாரிப்பகம், பேக்கரி,பார், துபானக்கடைகள், டீக்கடை,பழக்கடை என அனைத்து இடங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் அதிரடி ஆய்வு செய்தனர். 

இந்த ஆய்வின் போது கலர் பவுடர் அளவுக்கு  அதிகமாக உள்ளதாக 1000-த்திற்க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம்கள், பாதுகாப்பாக வைக்கப்படாத  பிரட், கேக் உள்ளிட்டவைகளையும், கலர் பவுடர் அதிகமாக சேர்க்கப்பட்ட  கோழிக்கறி சிக்கன் 65,கெட்டுப்போன இறைச்சி, ஷவர்மா சிக்கன் உள்ளிட்ட 30 கிலோ இறைச்சியையும்   பறிமுதல் செய்து புதைத்தனர். 

ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் மாவு தரமானதாக  உள்ளதா? பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். 

தரமான கோழிக்கறியை பயன்படுத்த வேண்டும், பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முறையில் ஷவர்மா விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம்  அதிகாரிகள் எச்சரித்தனர். 

சாலையோர சிற்றுண்டி கடைகளில் சோதனை செய்த உணவு பாதுகாப்புத்துறையினர் அவர்களிடம் லைெசன்ஸ் பெற்று உணவகம் நடத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.

Similar News