உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலை போட்டிகள் கலெக்டர் தகவல்

Update: 2022-05-06 10:22 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலை போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
ராணிப்பேட்டை,

கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் மாவட்ட , மாநில அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

கலை போட்டிகள் குரல் இசைப் போட்டி மற்றும் கருவி இசைகளான நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், ஆர்மோனியம், கீபோர்டு, சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசை போட்டியிலும், வர்ணங்கள் தமிழ் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் சில தளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

பரதநாட்டியத்தில் வர்ணம் மற்றும் தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச் சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலி ஆட்டம், தப்பாட்டம், மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். இப்போட்டியில் குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை.தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சியை நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரைய படவேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட போட்டியில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் வருகிற 10-ந் தேதிக்குள் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் -631502 என்ற முகவரிக்கு தங்களது பெயர், பிறந்தநாள், முகவரி, செல்போன் எண், பங்குபெற விரும்பும் கலைப்பிரிவு ஆகிய விவரங்களை அனுப்பலாம். 

9150085001 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்பலாம். வாய்ப்பினை கலைத்திறன் மிக்க ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Tags:    

Similar News