நந்திவரம் கூடுவாஞ்சேரி அருகே ரூ.18 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை
செங்கல்பட்டு:
நந்திவரம் கூடுவாஞ்சேரி அருகே ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் இளம்பரிதி, நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் செழியன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள்,ஜே.சி.பி.எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.18 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் அனைத்து அரசு ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்படும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்து உள்ளனர்.