உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் வனத்துறை கட்டுப்பாட்டில் நஞ்சராயன்குளம்- இனி மீன்கள் பிடிக்க முடியாது

Published On 2022-05-02 06:18 GMT   |   Update On 2022-05-02 06:18 GMT
தற்போது குளத்தில் 1,151 சதுர மீட்டர் பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. நல்லாற்றின் குறக்கே கட்டியுள்ள அணைக்கட்டின் மொத்த நீளம் 700 மீட்டர்.
திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள  நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊத்துக்குளி ஒன்றியம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம், 440 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 

நல்லாற்றில் வந்த மழைநீரை தேக்கி 62 ஏக்கரில் பயிர்சாகுபடி செய்த வரலாறும் மறையாமல் உள்ளது. தற்போது குளத்தில் 1,151 சதுர மீட்டர் பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

நல்லாற்றின் குறக்கே கட்டியுள்ள அணைக்கட்டின் மொத்த நீளம் 700 மீட்டர். உபரிநீர் வெளியேற 364 அடி நீளத்தில் இடது மதகும், 289 அடி நீளத்தில் வலது மதகும் அமைந்துள்ளது. அணையில்19 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கப்படுகிறது. 

குளத்துக்குள் கழிவுநீர் தேங்குவதை தடுக்க, தண்ணீர் வரத்து வரும் இடத்தில், சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குளத்தில் தேக்கப்பட்டது. மற்ற தண்ணீரை வெளியேற்ற, கான்கிரீட் வாய்க்கால் உள்ளது. 

குளத்தில் தேக்கிய மழைநீரை பயன்படுத்தி, சுற்றுப்பகுதி விவசாயிகள் ஆயக்கட்டு பாசனம் செய்தனர். குளத்தை சுற்றிலும் 109 ஏக்கர் பரப்புள்ள நிலம், ஆயக்கட்டு பாசன வசதி பெற்றுள்ளது. திருப்பூர் மாநகரின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் குளமாகவும் இருக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நஞ்சராயன்குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 7 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சரணாலயம் ஆன பிறகு குளத்தை சுற்றிலும் பல்வேறு சுற்றுலா கட்டமைப்பு உருவாக்கப்படும். 

சரணாலயத்தில், 'வாட்சிங் டவர்' மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும். சரணாலயத்தில் உள்ள, பறவைகள், விலங்குகள், உயிரினங்கள், செடி, கொடிகள் குறித்த தகவல்கள் அறிவியல் மையத்தில் இருக்கும். ஒவ்வொரு பறவைகள் குறித்த தகவலும் கிடைக்கும். 

பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு அறிவூட்டும் மையமாகவும் இருக்கும்.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால், குளத்தில் மீன் பிடிக்க ஏலம் விட்டு மீன்பிடி தொழில் நடந்து வந்தது. 

பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியாகும் முன்னதாக பொதுப்பணித்துறையின் குளம், வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மீன்பிடிக்க முடியாது. 

திருப்பூர் தொழில் நகரின் அருகாமையில், சிறப்பான பொழுதுபோக்கு தலமாக மாறப்போகிறது நஞ்சராயன் குளம். தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளம் மாறியுள்ளது. 

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டில், சரணாலயம் பராமரிக்கப்படும். மேம்படுத்தப்படும். தமிழக அரசு மட்டுமல்ல சரணாலாயத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடும் கிடைக்கும்.

இதுகுறித்து சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி தலைவர் சின்னசாமி கூறியதாவது:-

பறவைகள் சரணாலயம் உருவாவதன் மூலம், பெரியபாளையம் ஊராட்சியின் மேற்கு பகுதி, வேகமாக வளர்ச்சி பெறும். 

கடந்த, 2020-ம் ஆண்டிலேயே, அதற்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரைத்தோம். சுற்றுலா தலம் அமையும் போது, மக்களின் பொருளாதாரமும் உயரும். குளத்தின் மிக அருகே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது.

பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், இதன்மூலம் மேலும் பிரபலமடைய வாய்ப்புள்ளது. பறவைகள் சரணாலயம் வரும் பயணிகள், அருகே உள்ள சுக்ரீஸ்வர சுவாமியை தரிசித்து செல்லலாம். கோவில் செல்லும் ரோட்டில் விரைவில் அலங்கார வளைவு அமைக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News