உள்ளூர் செய்திகள்
செம்முனீஸ்வரர் கோவில் விழாவில் 3 ஆயிரம் ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அம்மா பேட்டை அருகே செம்முனீஸ்வரர் கோவில் விழாவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாபேட்டை:
அம்மா பேட்டை அருகே செம்முனீஸ்வரர் கோவில் விழாவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலின் வருடாந்திர திருவிழா சித்திரை மாதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றப்பட்டு பூச்சாட்டு விழா தொடங்கியது. 25-ந் தேதி ஆயக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து செம்முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை பூசாரியூர் மடப்பள்ளியில் இருந்து செம்முனீஸ்வரர், மன்னாத சுவாமி, பச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக வனக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வனக் கோவிலில் அமைந்துள்ள செம்முனீஸ்வரர் உட்பட அனைத்து பரிவார சிலைகளுக்கும் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மீண்டும் சாமிக்கு பல்வேறு ஆராதனை பூஜைகள் நடைபெற்ற பின் பூசாரி மற்றும் பக்தர்கள வாணவேடிக்கையுடன் குட்டிப்பாறை எனும் இடத்திற்கு சென்று பூசாரி ஆட்டுக்கிடாய் குட்டிக்கு பூஜை செய்து தீர்த்தம் தெளித்தார்.
ஆட்டுக்கிடாய் துளுக்கிய பின் அதனை முறைதாரர்கள் சாமிக்கு பலி கொடுத்தனர். பின்னர் ஆட்டுக்கிடாய் ரத்தத்தை குடிக்கும் முறை தாரர்கள் ஆட்டுக்குட்டியின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்தனர்.அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக நின்று தாங்கள் கொண்டுவந்த 3 ஆயிரம் ஆட்டுக்கிடாய்களை செம்முனீஸ்வரருக்கு பலி கொடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்த விழாவில் கர்நாடக மாநில பக்தர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 8 மணிக்கு செம்முனீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இன்று சனிக்கிழமை காலை வனக்கோவிலில் இருந்து முனீஸ்வரர் மன்னாதசாமி பச்சையம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை மீண்டும் மடப்பள்ளிக்கு சென்று விழா நிறைவுபெறும்.