உள்ளூர் செய்திகள்
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
சிவகங்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மானாமதுரை வட்டம் பறையன்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்து கொள்ளுதல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதிபரமேஸ்வரி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-
மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் உயர் பதவிகளை அடைய கல்வி ஒன்றே சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும். சமூக வலைதளங்களில் மாணவர்கள் பற்றி தவறான நடவடிக்கைகள்குறித்த செய்தி தினம்தோறும் வருகிறது. இதை தவிர்ப்பதற்கு மாணவர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும். மாணவிகள் புகழ்ந்து பேசுபவர்களிடம் கவனமாகவும், எச்சரிக்கை யாகவும் இருக்க வேண்டும்.
தனக்கு பாதுகாப்பு தேவையின் போது 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக பாதுகாப்பு வழங்கப்படும். அதுபோல் பெண்கள் குடும்ப வன்முறை போன்ற பாதிப்பின்போது பாதுகாத்து கொள்ள 181 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும் முதியவர்கள் உதவிக்கு 14567 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும் தகவல் தெரிவித்தால் உடனடியாக உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்வசந்த், முத்தனேந்தல் வட்டார மருத்துவ அலுவலர் கணேசபாண்டியன், தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் சத்தியமூர்த்தி, சைல்டு லைன் ஜுலி ஆகியோர் பேசினர். இதில்ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சட்டம் சார்ந்த தன்னர்வலர்கள் கலந்து கொண்டனர்.