உள்ளூர் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்

அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பஞ்சாயத்து தலைவர்கள் விருது பெற வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-04-25 16:03 IST   |   Update On 2022-04-25 16:03:00 IST
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந் தேதி தேசிய ஊராட்சிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ் நாடு முதலமைச்சர் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் சமூக நீதியை ஏற்படுத்தவும், சாதி சமயமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில், வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நேயம், குடிநீர் வசதி, சமூகப்பாது காப்பு, சிறந்த நிர்வாகம், அடிப்படை வசதிகள், பசுமையும் தூய்மையும் மற்றும் பாலின சமத்துவம் ஆகிய 9 இலக்குகளை அடைய வேண்டும்என்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் விருப்பத்தினை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியமான வாழ்வு, பசுமை மற்றும் தூய்மை கிராமம் மற்றும் பாலின சமத்துவ வளர்ச்சி ஆகிய சாரம்சங்கள் கொண்டு சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வரும் ஆண்டில் உத்தமர் காந்தி விருது தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. எனவே நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விருதினைபெற வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் அனைவரும் மேம்பட்ட வாழ்க்கை மற்றும் உடல்நலத்துடன் வாழ நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி வளர்சிக் குழு உறுப்பினர் நியமனம் செய்தல் உள்ளிட்ட 19 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் வேல் விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கமாக கூறினர்.

அப்போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தின மாலா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News