உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தடையில்லா மின்சாரம் திருப்பூர் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

Published On 2022-04-23 11:45 IST   |   Update On 2022-04-23 11:45:00 IST
கொரோனா தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளையும் அரசு விலக்கியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் உட்பட பலவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. அதிநவீன எந்திரங்களை இயக்கி, ஆடை உற்பத்தி தடையின்றி நடைபெற மின்சாரம் அத்தியாவசியமாகிறது. 

கொரோனா பரவலால் கடந்த 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள், பின்னலாடை உற்பத்தி துறை  சரிவுப்பாதையில் தள்ளப்பட்டது.

கொரோனா தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளையும் அரசு விலக்கியுள்ளது. இந்நிலையில், அபரிமிதமான பருத்தி பஞ்சு விலையால், ஒசைரி நூல் விலை தாறுமாறாக உயர்ந்து, பின்னலாடை துறையினரை மிரட்டி வருகிறது.

ஏற்கனவே ஏராளமான பிரச்சினைகள் சூழ்ந்துள்ள நிலையில், சில நாட்களாக, பின்னலாடை துறையினரை, மின்வெட்டு அச்சுறுத்திவருகிறது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அவ்வப்போது அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என மின்வெட்டு ஏற்படுகிறது. 

அதிகபட்சமாக கடந்த 2நாட்களுக்கு முன்பு இரவு பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து 2 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டது.

நாட்கள் செல்லச்செல்ல, மின்வெட்டு நேரமும் அதிகரிக்குமோ என்கிற கவலை சூழ்ந்துள்ளது. நூல் விலை, அனைத்து ‘ஜாப்ஒர்க்‘ கட்டணங்கள், துணை பொருட்கள் உயர்வால் ஆடை உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. 

வெளிமாநில, வெளிநாட்டு வர்த்தகரிடம் ஆடைகளுக்கு விலை உயர்வு பெறமுடியாமல் பின்னலாடை துறையினர் போராடுகின்றனர்.ஆடை தயாரிப்புக்கு போதிய நிதியின்றி தவிக்கின்றனர். 

ஆடைகளுக்கு விலை நிர்ணயிப்பதிலும், போட்டி நாடுகளை எதிர்கொண்டு ஆர்டர்களை கைப்பற்றுவதும் சவாலானதாக உள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்தால்  பின்னடைவை திருப்பூர் பின்னலாடை துறை சந்திக்கும் என தொழில் துறையினர் அஞ்சுகின்றனர். 

தடையில்லாத மின்சாரம் வழங்கி தொழில் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News