உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் அருகே கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாச்சியாபுரம் அருகே உள்ளது. இளங்குடி கிராமம். இங்குள்ள பெரிய கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தனியார் குளிர்பானம் நிறுவனம் கண்மாயை மாசுபடுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்த நிலையில் வட்டாட் சியர் வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் வசதி செய்து தருவதாக உறுதி கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட் சியர் வெங்கடேஷ் தலை மையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் காவல்ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், இளங்குடி கிராம மக்கள், குளிர்பான நிறுவன நிர்வாகிகள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இளங்குடி பெரியகண்மாயின் நீர்வரத்து கால்வாய்க்கு இடையூறாக தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தில் உள்ள கல்லுகால் மற்றும் ஆக்கிரமிப்புகளை இளங்குடி கிராம பொது மக்கள் முன்னிலையில் நாளை (23&ந்தேதி) அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதேபோல குளிர்பான நிறுவனத்திலிருந்து பெரிய கண்மாய் வரத்துக்கால் வாயில் கலக்கும் கழிவுநீரை பரிசோதனை செய்வதற்கு சிவகங்கை மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை செய்யவும், கழிவுநீரை குளிர்பான நிறுவனத்தின் உள்பகுதிக்குள் வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கிராமத்தின் சர்வே எண் 19ல் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி பாதை ஏற்படுத்த நாச்சியாபுரம் குறுவட்ட அளவர் மூலம் புலத்தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இளங்குடி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில், இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்டது என்பதை உறுதி செய்ய அறநிலையத்துறை ஆய்வாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் முறையாக மனுசெய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நாச்சியாபுரம் காவல் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், நாச்சியாபுரம் வருவாய் ஆய்வாளர் அங்காளேஸ்வரி, இளங்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்துகிளி, இளங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்து, சமூக ஆர்வலர்கள் சண்முகசுந்தரம், அண்ணாமலை, சக்திவேல், நித்தியா, வார்டு உறுப்பினர் சாந்தி நேரு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.