உள்ளூர் செய்திகள்
கைது

திருக்கோவிலூரில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குறித்து அவதூறு பரப்பிய நபர் கைது

Published On 2022-04-21 16:19 IST   |   Update On 2022-04-21 16:19:00 IST
ஒரே சமயத்தில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் நகர மன்ற தலைவராக விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் டி.என். முருகன் பதவி வகித்து வருகிறார்.

இவரின் செயல்பாடுகள் பற்றியும், நகராட்சியின் கவுன்சிலர்கள் செயல்பாடுகள் குறித்தும் திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்த டேவிட் குமார் (வயது 49) என்பவர் அவரது முகநூலில் அவதூறாக பேசி இருந்தார். இதனால் டேவிட் குமாரிடம் நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன் நேரில் சென்று ஏன் தவறான தகவலை முகநூலில் பதிவு செய்கிறாய் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் குமார் நகராட்சி தலைவர் டி.என்.முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவல் திருக்கோவிலூரில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் நகர தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்திலும் பின்னர் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தி.மு.க. நகராட்சித் தலைவர் டி.என்.முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டேவிட் குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் டேவிட்குமார் அ.தி.மு.க கவுன்சிலர்கள் குறித்து அவதூறு பரப்பியதால் திருக்கோவிலூர் நகர்மன்ற அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு டேவிட்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட திருக்கோவிலூர் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

அப்போது திருக்கோவிலூர் நகர்மன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் சி.ஆர். சம்பத், ஏ.வி.எம்.ரகு என்கிற முகேஷ், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதம்‌ஷபி, வக்கீல் அசோக் மேத்தா, சிவசங்கரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். ஒரே சமயத்தில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News