உள்ளூர் செய்திகள்
ஜாதிவாரியான புள்ளிவிவரத்துடன் வகுப்புவாரி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் - சமூகநீதி கூட்டமைப்பு வலியுறுத்தல்
வன்னியருக்கு 10.50 சதவீதம் இடஒதுக்கீடு அளித்த முடிவுக்கு எதிராக பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
திருப்பூர்:
சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடந்தது. வக்கீல் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கூட்டத்தில் சமூக நீதி கூட்டமைப்பின் கோரிக்கையை, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் வாயிலாக கலெக்டரிடம் அளிப்பது, கோரிக்கையை வலியுறுத்தி கோட்டையை நோக்கி நடக்கும் பேரணியில் திரளாக பங்கேற்பது, பி.சி., எம்.பி.சி., டி.என்.டி., மக்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாவட்டம் வாரியாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி சமூகநீதி கூட்டமைப்பு நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், வன்னியருக்கு 10.50 சதவீதம் இடஒதுக்கீடு அளித்த முடிவுக்கு எதிராக பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் பின்னரே இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும்.
பழைய புள்ளி விவர அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வது முறையல்ல. ஜாதிவாரியான புள்ளி விவரத்துடன் வகுப்புவாரி இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து விளக்க இருக்கிறோம். ஜாதிவாரியான புள்ளி விவரம் தயாரிக்க விரைவில் கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.