உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தபோது கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்திய 89 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2022-04-20 04:56 GMT
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 89 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு கோபூஜை, கஜபூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

பின்னர் மன்னம்பந்தல் வழியாக தருமபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மன்னம்பந்தல் பகுதியில் கவர்னர் செல்லும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்தும், கவர்னரை திரும்பச் செல்ல வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனர். அப்போது கவர்னர் பார்வையில் போராட்டக்காரர்கள் இருப்பதை மறைக்கும் வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு போலீசார் மறைத்தனர்.

அப்போது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீதும் கருப்பு கொடிகளை வீசி எரிந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக கவர்னருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் தேசியகொடியை ஏந்தி வரவேற்பளித்தனர்.

தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. மேற்பார்வையில் 2 வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 1,850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 89 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், செம்பை ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் வேலு குபேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன்குமார், தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 89 பேர் மீது சட்டவிரோதமாக கூட்டம் சேருதல், அதிகாரிகளின் உத்தரவை மீறி போராட்டம் நடத்தியது, முறையற்ற தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் (143, 188, 341, 427, 511 ஆகிய பிரிவுகள்) மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மன்னம்பந்தல் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் இரவு விடுதலை செய்தனர்.

Tags:    

Similar News