உள்ளூர் செய்திகள்
மானாமதுரையில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் கடந்த 10நாட்களாக நடைபெற்று வந்த சித்திரை திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது.
இந்தகோவிலில் கடந்த 7ந்தேதி சித்திரைதிருவிழா தொடங்கியது தினமும் இரவு மண்டகப்படிகளில் ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 15ந்தேதி எஸ்.பி.பொன்னம்பலம்பிள்ளை குமாரர்கள் குடும்பத்தினர் மண்டகப்படியில் ஆனந்த வல்லி அம்மனுக்கும் சோமநாதர் சுவாமிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுதரிசிக்க திருக்கல் யாண வைபவம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 16ந்தேதி தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளில் இரவு ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் இரு ரிஷபவாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
சித்திரை திருவிழாவின் நிறைவாக கோவில் கொடி மரத்தில் கொடிஇறக்கப்பட்டு தீர்த்தோற்சவ வைபவம் நடந்தது. இரவு கோவில் உள்பிரகாரத்தில் அம்மன், சுவாமி பக்திஉலா வருதல் நடைபெற்றது.
10நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் சுவாமிக்கான பூஜைகளை சோமாஸ்கந்தன் பட்டர், ராஜேஷ் பட்டர், சக்கரைப் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச் சாரியார்கள் நடத்தினர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர், மற்றும் மண்டகப்படி தாரர் கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கமும், சுகாதார ஏற்பாடு மற்றும் வைகை ஆறு சீரமைக்கும் பணிகளை நகராட்சிதலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன், சுகாதர ஆய்வாளர் தங்கதுரை ஆகியோரும் செய்திருந்தனர்.