உள்ளூர் செய்திகள்
அபராதம்

கோழி இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டினால் அபராதம்- நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Published On 2022-04-19 15:25 IST   |   Update On 2022-04-19 15:25:00 IST
தினந்தோறும் சேகரித்து வைத்துள்ள கோழி இறைச்சி கழிவுகளை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஒவ்வொரு கடைகளிலும் நேரடியாக மினி டெம்போ மூலம் எடுத்து செல்ல குறைந்த வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் கோழி இறைச்சி கடை கழிவுகளை முறையாக கையாளுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் குமரன், துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் ‌ஷமீம்பானு அப்துல்ரசாக் வரவேற்றார்.

கூட்டத்தில் நகராட்சி சேர்மன் பேசுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் இயங்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகளில் கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் ஆங்காங்கே கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கோழி கழிவுகளை தனியாக கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளளது. அந்த இடத்தில் மட்டுமே கோழி கழிவுகளை கொட்ட வேண்டும்.

மேலும் தினந்தோறும் சேகரித்து வைத்துள்ள கோழி இறைச்சி கழிவுகளை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஒவ்வொரு கடைகளிலும் நேரடியாக மினி டெம்போ மூலம் எடுத்து செல்ல குறைந்த வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கோழி கடை உரிமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனையும் மீறி கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் கொட்டுவதை கண்காணித்து கண்டுபிடித்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News