உள்ளூர் செய்திகள்
இடி, மின்னல் தாக்கி பழுதடைந்த மின் மாற்றியை படத்தில் காணலாம்

தியாகதுருகம் அருகே இடி, மின்னல் தாக்கி மின்மாற்றி சேதம்- பொதுமக்கள் அவதி

Update: 2022-04-18 12:15 GMT
சிறுவல் பகுதியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்காததால் விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு மோட்டார் மூலம் நீர் இறைக்க முடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து சிறுவல் கிராமத்தில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில் உள்ள சுமார் 25 விவசாய மின் மோட்டார்களுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் இந்த மின்மாற்றி பழுதடைந்தது. தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து பழுதடைந்த மின்மாற்றியில் இருந்து செல்லும் இணைப்பை துண்டித்து விட்டு, தியாகை பகுதியிலுள்ள மின்மாற்றியில் இருந்து சிறுவல் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு தியாகை பகுதியிலுள்ள மின்மாற்றியில் இருந்து கூடுதலாக மின்னிணைப்பு வழங்கப்பட்டதால் சிறுவல் பகுதியில் வீடுகளில் குறைந்த அளவு மின்சாரம் வருவதாகவும், இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவைகள் அவ்வப்போது பழுதடைவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிறுவல் பகுதியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்காததால் விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு மோட்டார் மூலம் நீர் இறைக்க முடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தியாகதுருகம் மின்சார வாரிய அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பழுதடைந்த மின் மாற்றியை கழற்றி சரி செய்து உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News