உள்ளூர் செய்திகள்
.

355 பள்ளிகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு-சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்

Published On 2022-04-18 16:21 IST   |   Update On 2022-04-18 16:21:00 IST
355 பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி.யில் தான் குழந்தைகளை சேர்க்க முடியும் என சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 தமிழகத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

 
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1)(சி) ன்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை நுழைவு நிலை வகுப்பில் அதாவது எல்.கே.ஜி., முதல் வகுப்பில் சேர்க்கை வழங்கப்படுகின்றன.

 வருகிற கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வி துறை மேற்கொண்டு வருகிறது. 

சேலம் மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தனியார் சுயநிதி பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 355 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. 

கடந்த 2 கல்வி ஆண்டுகளிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் சரவர செயல்படவில்லை. குறிப்பாக மழலையர் பள்ளிகள் அரசு உத்தரவுபடி மூடப்பட்டன. இதனால் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் கஷ்டப்படும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எல்.கே.ஜி.யில் சேர்க்கவில்லை. 

தற்போது அவர்கள் வருகிற கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் விண்ணப்பிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 வருடங்கள் பள்ளியில் சேர்க்காததால் குழந்தைகளுக்கு வயது வரம்பு அதிகமாவதால் நுழைவு வகுப்பு அதாவது முதல் வகுப்பில் (1ம் வகுப்பு) சேர்க்க முடியுமா? என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது.

 
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் 355 பள்ளிகளிலும் நுழைவு நிலை வகுப்பு எல்.கே.ஜி. தான். 

ஆகவே இந்த பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் இருந்து தான் குழந்தைகளை சேர்க்க முடியும். ஏனெனில் நுழைவு நிலை வகுப்பே எல்.கே.ஜி. என்பதால் முதல் வகுப்பில் சேர்க்க முடியாது.

மேலும் ஒரு மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தொடர்ந்து படித்து வரும் தங்களது குழந்தைகளை அந்த மாவட்டத்தில் இருந்து நாளடைவில் பெற்றோர், பிழைப்பு தேடி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தால், குழந்தைகளை வேறு பள்ளிகளில் அதே இட ஒதுக்கீட்டில் சேர்க்க முடியுமா? என்பது பற்றி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News