உள்ளூர் செய்திகள்
கால்நடை மருந்தக கட்டிடம்

நெகமம்-வடசித்தூர் மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனையாகுமா?

Published On 2022-04-18 15:52 IST   |   Update On 2022-04-18 15:52:00 IST
அனைத்து வசதிகளையும் கொண்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தை இப்பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெகமம்: 

நெகமம்-வடசித்தூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

கால்நடை மருந்தகங்கள் கூடுதல் இடவசதி பெற்றிருந்தும் இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை என்ற வருத்தம் விவசாயிகளிடையே தொடர்ந்து நீடித்து வருகிறது. 

உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., எம்.பி.,க்களின் பரிந்துரை இல்லாததால், தரம் உயர்த்தப்படுவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, கோவை ஆகிய இரு இடங்களில் மட்டும் கால்நடை பெரு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. வேறெங்கும் பெரு மருத்துவமனைகள் இல்லை. உருவாக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போதைய சூழலில் நெகமம் -வடசித்தூர் கால்நடை மருந்தகங்களுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய், பூனை, கோழி உள்ளிட்டவை சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த 2 கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பும், எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

எனவே, அனைத்து வசதிகளையும் கொண்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தை இப்பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த 2 கால்நடை மருந்தகங்களை, மருத்துவமனைகளாக தரம் உயர்த்த உறுதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:
 
நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் கால்நடை மருந்தகம் உள்ளது. இங்கு தற்போது அளவான மருந்து மற்றும் மாத்திரைகள் தான் கிடைக்கும். கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே, மற்றும் பல்வேறு வகையான வசதிகள் கிடைக்கும். மேலும் மருந்துகள் அதிகளவில் வரும் விவசாயிகள் மேல்சிகிச்சைக்காக வேறு எங்கும் கால்நடையை அழைத்து செல்லவேண்டியது இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்

Similar News