உள்ளூர் செய்திகள்
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்.

மழையால் பாதித்த உளுந்து பயிர்களுக்கு இழப்பீடு கோரி 20-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-18 15:49 IST   |   Update On 2022-04-18 15:49:00 IST
மழையால் உளுந்து பயிர்கள் நாசமடைந்ததால் இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நாகப்பட்டினம்:

நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்துக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவருமான தனபால் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் உதவிகள், போராட்டம் நடத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

பின்னர் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் பருவம்தவறி 59 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததால் உளுந்து பயிர்கள் அனைத்துமே அழிந்து போய்விட்டது. தமிழக அரசு விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று சொன்னதுபோல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 

மேலும் விவசாயிகளுக்கு உளுந்து பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். 

காப்பீட்டு நிறுவனம் விளைச்சலே இல்லாதபோது குறைந்த பட்ச விளைச்சலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். 

இது குறித்து வேளாண்துறை உரிய வகையில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், விளைச்சலை மதிப்பீடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய சங்கங்களின் கூட்ட இயக்கம் சார்பில் வருகிற 20-ந் தேதி காலை 11 மணியளவில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News