உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சியில் செல்போன் திருடிய மின் ஊழியர் உள்பட 2 பேர் கைது
போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மாக்கினம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 32).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் காளீஸ்வரன் என்பவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காளீஸ்-வரன் மோதிராபுரம் பகுதிக்கு பொருட்களை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் டெலிவரி செய்வதற்காக சென்றார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது.
அதனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென காளீஸ்வரன் வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போனை திருடினர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரன் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரன் உடனே தண்டாயுதபாணிக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து திருடர்களைத் தேடி வந்தனர்.
விசாரணையில் கோட்டூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (20) மற்றும் மின் ஊழியர் தருண் பிரதீப் குமார் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.