உள்ளூர் செய்திகள்
சிறப்பு யாகத்தில் பங்கேற்ற தம்பதிகள்.

திருவண்ணாமலை அருகே உலக நன்மைக்காக 1000 தம்பதிகள் பங்கேற்ற சிறப்பு யாகம்

Published On 2022-04-18 15:26 IST   |   Update On 2022-04-18 15:26:00 IST
திருவண்ணாமலை அருகே உலக நன்மைக்காக 1000 தம்பதிகள் பங்கேற்ற சிறப்பு யாகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் பழமையான ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக 1000 தம்பதிகள் பங்கேற்ற புத்திரகாமேஷ்டி மகா யாகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த15-ம் தேதி மங்கல இசை நிகழ்ச்சி மற்றும் விக்னேஸ்வர பூஜை, பாசுபதாதிர யாகம், நாந்திசிராத்தம், வேத பாராயணம், 108 கன்யா பூஜை. 108 வடுக பூஜை. தம்பதிகள் சங்கல்பம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 

சித்திரா பவுர்ணமி அன்று சிவனடியார் பூஜை, சப்தரிஷி பூஜை, தம்பதி பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மஹா பூர்ணாஹுதி, அகஸ்திய மகா யாகம், புத்திர காமேஷ்டி யாகம் ஆகியவை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாள், அகத்தியர் லோபாமுத்ரா தேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் 1008 தம்பதிகள், 1008 சுமங்கலிகள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை ஊற்றி பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த யாகத்திற்காக ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு இருந்தது. 

இந்த யாகத்தில் பங்கேற்ற தம்பதிகள் 2 நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் தங்கி இருந்து 3 நாட்களுக்கு உப்பில்லாத உணவை உட்கொண்டனர்.

இந்த யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று யாக ஏற்பாடுகளை செய்திருந்த அகத்தியர் அன்புசெழியன் தெரிவித்தார்.

Similar News