உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலர்களுக்கு பிரத்யேக கண்ணாடி மாளிகை-வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி தகவல்

Published On 2022-04-18 15:23 IST   |   Update On 2022-04-18 15:23:00 IST
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அடுத்த மாதம் கோடைவிழா நடத்தப்படுகிறது
ஊட்டி: 

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அடுத்த மாதம் கோடைவிழா நடத்தப்படுகிறது.

ஊட்டி ரோஜா பூங்காவில் 14, 15-ந் தேதிகளில் ரோஜா கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 20ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 28 மற்றும் 29ந் தேதிகளில் பழ கண்காட்சியும் நடக்கிறது.

கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீலகிரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆர்க்கிட் மலர்களைச் சேகரித்து ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் பிரத்யேகமாக ஆர்க்கிட் கண்ணாடி மாளிகை அமைக்கப்படும்.

நடப்பு ஆண்டில் மே மாதத்தில் நடைபெறவுள்ள கோடை விழாவில் மலர் கண்காட்சியின்போது சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கும் வகையில் மலர்க் கண்காட்சி நடத்தப்படும். 

ஊட்டியில் உள்ள மரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மலர் அலங்காரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தோட்டக் கலைத் துறையின் பூங்கா மற்றும் பண்ணைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளிப்பது தொடர்பான கோரிக்கை மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News