உள்ளூர் செய்திகள்
கன மழையால் சேதமடைந்த எள்பயிர்

கனமழையால் 4 ஆயிரம் ஏக்கர் எள்பயிர் சேதம்

Published On 2022-04-18 15:14 IST   |   Update On 2022-04-18 15:14:00 IST
கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் பெய்த கனமழையால் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எள் பயிர் சேதம் அடைந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

நெற்ப்பயிர் அறுவடைக்கு பிறகு  கோடை காலப் பயிரான எள் சாகுபடி செய்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் எள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

எள் கோடைகால பயிர் என்பதால் இதற்கு அதிகபடியான தண்ணீர் தேவைபடாது, நெல் அறுவடைக்கு பிறகு நிலத்தில் உள்ள ஈர பதத்திலேயே உழவு செய்து எள் விதைக்கப்படுகிறது. அதன் பின் பனிப் பதத்திலேயே அது வளர்ச்சியடைகிறது.

ஏக்கர் ஒன்றிற்கு 6 மூட்டைகள் வரை விளையக்கூடிய எள் பயிரானது, ரூ50 முதல் 60 ஆயிரம் வரை லாபம் ஈட்டி தரக்கூடியது.

இந்நிலையில் சமீபத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கண்டிச்சாங்காடு, ஏகப்பெருமாளூர், வெள்ளாட்டுமங்கலம், கம்பர்கோவில், தினையாகுடி, சிங்கவனம் உள்ளிட்ட 40க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் எள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

 இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்கு பிறகு கோடை காலப் பயிரான எள் விதைப்பு செய்வோம், இதற்கு ஒரு முறை மட்டுமே உரம் தெளிக்கப்பட்டு, மூன்றிலிருந்து நான்குமுறை பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது.

மேலும் எள் அறுவடைக்கு பிறகு, செடியிலிருந்து எள்ளை பிரித்து எடுப்பதற்காக, அறுவடை செய்த எள் செடிகளை போர் போட்டு அடைந்து வைக்கப்படுகிறது. அப்போது பூச்சி பிடிக்காமல் இருக்க ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆள் கூலி என மொத்தம் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக எள் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.

ஏற்கனவே நெற்ப்பயிர் சாகுபடியில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் தற்போது எள் பயிர் சாகுபடியிலும் இயற்கை சீற்றத்தால் மீண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.

எனவே தமிழக அரசு உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகளை கொண்டு நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Similar News