உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இலவச இ-சேவை மையமாக மாற்றிய அமைச்சர்

Published On 2022-04-18 14:49 IST   |   Update On 2022-04-18 14:49:00 IST
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இலவச இ-சேவை மையமாக அமைச்சர் மாற்றியுள்ளார்.
பெரம்பலூர்:

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கார், தனது குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் நலன் கருதி இலவச இ-சேவை மையமாக ஞாயிற்றுக்கிழமை மாற்றினர்.

குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினார் அலுவலகம் குன்னத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில், அத்தொகுதி உறுப்பினரான அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கணினி, பிரிண்டர், இணையதள வசதி ஆகியவற்றை அமைத்து பொதுமக்கள் நலன்கருதி இலவச இ- சேவை மையமாக மாற்றியுள்ளர்.

இம் மையத்தை, பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. ராஜேந்திரன் தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

இந்த இ- சேவை மையம் மூலம் எவ்வித கட்டணமின்றி பொதுமக்கள் இணையதளம் வழியாக பிறப்பு, இறப்பு, வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெறலாம்.

ஆதார் திருத்தம், மின் கட்டணம், பல்வேறு வரிகள் செலுத்துதல், போக்குவரத்து அபராதக் கட்டணம் செலுத்துதல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், போட்டித் தேர்வு, வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு இணைய சேவைகளை இலவசமாக பெற வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே கோடைகால தண்ணீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரி, இளநீர், பப்பாளி ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, வேப்பூர் ஒன்றியம், மூங்கில்பாடி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ. 46.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு, மோட்டார் அறை மற்றும் குழாய் அமைத்து கிராம பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையிலான திட்டத்தையும் அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.

Similar News