உள்ளூர் செய்திகள்
கொடுங்கையூரில் சிலிண்டர் வெடித்து 2 கடைகளில் பயங்கர தீ விபத்து
கொடுங்கையூரில் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென சிலிண்டர் வெடித்து 2 கடைகளிலும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த தீ விபத்து காரணமாக நள்ளிரவில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பெரம்பூர்:
சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா சாலையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனக்கு சொந்தமான இந்த இடத்தில் 2 கடைகளை வாடகைக்கு விட்டிருந்தார்.
இவைகளில் ஒன்றில் கோழி இறைச்சி கடை செயல்பட்டு வந்தது. இதனை பரூக்பாஷா என்பவர் நடத்தி வந்தார். சீதாலட்சுமி என்ற பெண் இன்னொரு கடையில் உணவகம் நடத்தி வந்தார்.
கோழி இறைச்சி கடை நேற்று மதியம் வரையிலும் உணவகம் இரவு 11 மணி வரையிலும் செயல்பட்டுள்ளது. பின்னர் கடையை மூடிவிட்டு உணவகம் நடத்தி வந்த சீதாலட்சுமி தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென சிலிண்டர் வெடித்து 2 கடைகளிலும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த தீ விபத்து காரணமாக நள்ளிரவில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அக்கம் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியத்துக் கொண்டு எழுந்து வீடுகளை விட்டு வெளியில் வந்தனர். பின்னர் இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர், கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகே தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து நடந்ததால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.