உள்ளூர் செய்திகள்
திருவிளக்கு பூஜை

பம்மம் பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா

Published On 2022-04-18 13:57 IST   |   Update On 2022-04-18 13:57:00 IST
பம்மம் பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா 9 நாட்கள் நடக்கிறது
கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் பம்மம் ஆதி மூலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வருடாந்திர சித்ரா பவுர்ணமி கொடை விழாவும், இந்து சமய மாநாடு மற்றும் 19-வது வருஷாபிஷேக திருவிழாவும்  16-ந் தேதி தொடங்கியது.  விழா வருகிற 24-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

தினமும் காலை சுப்ரபாதம், நிர்மால்யம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஞான வேள்வி, சிறப்பு அபிஷேகம், அகவல் பாராயணம், சிறப்பு பூஜை, அன்னபூரணி ஸ்தோத்திரம், தீபாராதனை, மதியம் அன்னதானம், இரவு சிறப்பு பூஜை, அம்மன் ஆலய வலம் வருதல், அத்தாள பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

முதல் நாள் (16-ந் தேதி)  மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ராஜேஸ்வரி உத்தமன் குட்டி தாய் தீபம் ஏற்றி வைத்தார். 2-ம் நாள் காலை அம்மன் அலங்கார பல்லக்கில் ஊர் சுற்று பவனி நடைபெற்றது. 

பவனி கைதறவிளை, கைசாலவிளை, மாங்காவிளை, பறம்பின்கரை, சிறிய காட்டுவிளை, கீழ்பம்மம் வழியாக ஆலயம் வந்தடைந்தது.  இரவு 8.30 மணிக்கு நடன நிகழ்ச்சி நடைபெறும்.

3-ம் திருவிழாவான இன்று (18-ந் தேதி)  இரவு 8.30 மணிக்கு சிறப்பு இந்து சமய மாநாடு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் சங்கர் தலைமை தாங்குகிறார். பொன்னப்பன் வரவேற்புரை ஆற்றுகிறார். 

கோவில் தர்மகர்த்தா உத்தமன் குட்டி முன்னிலை வகிக்கிறார். பத்மகுமார், ஜெயசீலன், செல்வராஜ், செந்தில் முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். வக்கீல் விஜயராகவன் நன்றி கூறுகிறார்.

4-ம்  நாள் இரவு 8.30 மணிக்கு பஜனை, 5-ம்  நாள் மாலை பஜனை, சிறப்பு பூஜை, 6-ம் நாள் இரவு 8.30 மணிக்கு ஆலய சமயவகுப்பு மாணவ-மாணவிகளின் கலை-நிகழ்ச்சிகள் நடைபெறும்.  

7-ம்  நாள் இரவு 8.30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 8-ம் நாள் பிற்பகல் 3 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், இரவு 11 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறும். 

9-ம் நாள் காலை 10.30 மணிக்கு கூட்டு பொங்கல் வழிபாடு, பெரிய படுக்கை, மகா காயத்திரி ஹோமம், மதியம் 11.45 மணிக்கு பக்தர்கள்  அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், மாலை 3 மணிக்கு பால்குட பவனி, 6 மணிக்கு அம்மன் ஆராட்டு, 7 மணிக்கு குங்குமாபிஷேகம், 7.45 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு பூஜை பின்னர் சிற்றுண்டி வழங்கப்படும். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், கோவில் தர்மகர்த்தா உத்தமன் குட்டி மற்றும் ஊர் பொதுமக்கள்  இணைந்து செய்து வருகின்றனர்.

Similar News