உள்ளூர் செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை:
பெரும்பாக்கம், எழில் நகரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு அங்கு வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்ஷா(வயது 33) என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடிக்கு சென்றார். அப்போது திடீரென அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்த சுனில்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுனில்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுனில்ஷா மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.