உள்ளூர் செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பூஜை
ஜூன் 29-ந் தேதி முதல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பூஜை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் வைத்து நடை பெற்றது. கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். கோவில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு, முன்னாள் இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ரவி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
108 வைணவத் திருப்பதி களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த கோவிலில் கும்பா பிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர் சங்கங்கள், இந்து அமைப்புகள் ஆகி யோர் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
அதன்படி பழமைவாய்ந்த கோவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணிகள் நடந்து வந்தது. கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததின் பேரில் இந்து மசய அற நிலைத்துறை அமைச் சர் சேகர்பாபு நேரடி யாக வந்து பார்த்து ஆய்வு செய்தார் அதன் பேரில் கோவில் பணி கள் விரைந்து நடை பெற்று வந்தன.
தற்போது கோவிலில் விளக்கணி மாடவேலைகள் முடிவடைந்து விட்டது, கோயில் சுற்றுப்புற தரை சரி செய்யும் பணிகள், மியூரல் ஓவியப்பணிகள், மடப்பள்ளி வேலைகள் நடைபெற்று வருகிறது.
கோவிலில் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடை பெறும் நிலையில் அதற்கு முன்னோடியாக ஜூன் 29-ந் தேதி முதல் கும்பா பிஷேக பூஜைகள் தொடங்குகிறது. பின்னர் ஜூலை 6-ந் தேதி காலை ஆதிகேசவ பெருமாள் சன்னதி, தர்ம சாஸ்தா கோவில், கிருஷ்ணன் சன்னதி, குலசேகர பெருமாள் திருக்கோவில் ஆகியவற்றில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஜூலை 6, 7, 8-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஜூலை 9-ந் தேதி கொடிமர பிரதிஷ்டை பூஜைகளுக்குப் பின்னர் திருகொடியேற்றப்படும். அன்றிலிருந்து 10 நாட்கள் கோவிலில் திருவிழா நடைபெறும். 9-ந் நாள் பள்ளி வேட்டை, 10-ம் நாள் ஆறாட்டு ஆகியன நடைபெறும்.
வழக்கமாக திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இம்முறை ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று 9-ந் தேதி கொடியேற்றப்படுவதால் 10 நாட்கள் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஐதீகம்.
அதன்படி இந்த ஆண்டு 3 முறை கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோவிலைச் சுற்றியுள்ள 12 காவு கோவில்களிலும் பரிகார பூஜைகள் நடைபெற உள்ளது. மேற்கண்ட விழா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.