உள்ளூர் செய்திகள்
வாகனங்கள் அணிவகுந்து நின்ற காட்சி.

கப்பலூர் டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-04-18 13:07 IST   |   Update On 2022-04-18 13:07:00 IST
ஒவ்வொரு வாகனமும் கப்பலூர் டோல்கேட்டை கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் வரை ஆனதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் வாகனங்களில் அமர்ந்தபடி நீண்டநேரம் காத்துக்கிடந்து அவதிக்கு ஆளானார்கள்.
திருமங்கலம்:

தமிழ் புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை கிடைத்ததால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு பஸ்களிலும், கார்களிலும், வேன்களிலும் ஒரே சமயத்தில் திரும்பி சென்றனர்.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி,சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி செல்லும் 4 வழிச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசார் மற்றும் ஹைவே பேட்ரோல் போலீசார் சீர்செய்து வாகனப் போக்குவரத்து தடையின்றி செல்ல உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் 4 வழிச்சாலை டோல்கேட்டில் நேற்று காலை முதல் வாகனங்கள் இயக்கம் அதிகமாக காணப்பட்டது. விடுமுறை முடிந்து டோல்கேட்டை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும் டோல்கேட் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்யாமல் கட்டண வசூலில் மட்டுமே குறியாக இருந்தது.

நேற்று மாலை பலத்த மழைக்கு நடுவே வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததால் செய்வதறியாது திகைத்துப் போன டோல்கேட் ஊழியர்கள் பணிகளை விரைவாக செய்ய இயலாமல் தவித்தனர். இதன் காரணமாக கப்பலூர் டோல்கேட்டில் மதுரை நோக்கி செல்லும் பாதையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் அந்த பகுதி முழுவதிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாகனமும் கப்பலூர் டோல்கேட்டை கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் வரை ஆனதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் வாகனங்களில் அமர்ந்தபடி நீண்டநேரம் காத்துக்கிடந்து அவதிக்கு ஆளானார்கள்.

Similar News