உள்ளூர் செய்திகள்
அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணை விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு - துரைமுருகன்

Published On 2022-04-18 07:24 GMT   |   Update On 2022-04-18 09:04 GMT
தமிழக சட்டசபை காலை 10 மணிக்கு தொடங்கியதும், மேகாலயாவில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:

சட்டசபையில் முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலை வர் ஓ.பன்னீர்செல்வம், “முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்வதாகவும், அங்குள்ள பேபி அணை, சிற்றணை க்கு பழுது பார்க்க இங்கிருந்து செல்லும் போது கேரளாவில் தடை விதிப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கேரள அரசுடன் நல்ல நட்பு முதல்வருக்கு இருப்பதால், அந்த நட்பை பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தி.மு.க. சார்பாக கம்பம் ராமகிருஷ்ணன் பேசும் போது, “தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்றார். இதை தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, இருமாநில அரசின் நல்லுறவை பேணும் வகையில் கேரளா அரசு செயல்படுவதோடு, 152 அடியாக முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி சார்பாக பேசிய செல்வ பெருந்தகை, “முல்லை பெரியாறு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இதே போல சி.பி.எம். சார்பாக நாகை மாலி, சி.பி.ஐ. தளி ராமசந்திரன் ஆகியோரும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,” அனைத்து அணைகளையும் பாதுகாப்பது ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. மேலும், இச்சட்டம் வர இன்னும் ஓராண்டு ஆகும் என்றார். ஆனால், இந்த சட்டத்தின் சரத்துகளின் படி அணை பராமரிப்பை நம்மிடம் கொடுத்துள்ளதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், முல்லை பெரியாறு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Tags:    

Similar News